ஆலங்காயம் ஒன்றியத்தில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு செஸ் போட்டி
ஆலங்காயம் ஒன்றியத்தில் மாணவ, மாணவிகளுக்கு செஸ் விழிப்புணர்வு போட்டி நடந்தது.
வாணியம்பாடி
ஆலங்காயம் ஒன்றியத்தில் மாணவ, மாணவிகளுக்கு செஸ் விழிப்புணர்வு போட்டி நடந்தது.
மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதனையெட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி பகுதிகளில் கடந்த 15-ந் தேதி முதல் செஸ், ஓவியம், வினாடி-வினா, ரங்கோலி, கோலம் உள்ளிட்ட போட்டிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் சார்பில், ஆலங்காயத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற போட்டிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பல்வேறு பிரிவுகளாக வயது வாரியாக செஸ் போட்டி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு சங்கீதா பாரி தலைமை தாங்கினார். துணை தலைவர் பூபாலன், பேரூராட்சி தலைவர் தமிழரசி, துணைத் தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய ஆணையாளர் விநாயகம் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் எம்எல்ஏ குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து செஸ் போட்டிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, கிராம ஊராட்சிகள் ஆணையாளர் சிவக்குமார், ஆலங்காயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, ஒன்றிய குழு உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள், வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.