அரசு கல்லூரி மாணவர்களுக்கு போட்டி தேர்வு குறித்து விழிப்புணர்வு

அரசு கல்லூரி மாணவர்களுக்கு போட்டி தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2022-10-02 19:42 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு போட்டி தேர்வு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் திருவனந்தபுரம் பத்திரிகை தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் பழனிச்சாமி, இந்திய தனித்துவ அடையாள ஆணைய துணை பொது இயக்குனர் கோபாலன், தொல்பொருட்கள் ஏற்றுமதி கழக செயல் இயக்குனர் செல்வம், திருச்சி மண்டல அஞ்சல் தலைவர் கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்தும், வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றை மூலதனமாக கொண்டு தங்கள் இலக்கை நோக்கி செல்லும் போது வெற்றி பெறுவது எளிதான செயலாகும். தோல்வியை வெற்றிக்கான முதல் படி என நினைத்து தங்கள் இலக்கை தொடர வேண்டும் என அறிவுரை கூறினர். நிகழ்ச்சியில் போட்டி தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது? அதற்கான வழிகாட்டுதல் குறித்து திருவனந்தபுரம் பத்திரிகை தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் பழனிச்சாமி பட காட்சியுடன் விளக்க உரையாற்றினார். மத்திய, மாநில அரசு பணிகள் அனைத்தும் போட்டி தேர்வுகளை அடிப்படையாக கொண்டு பணி நியமனம் செய்யப்படுகிறது. போட்டி தேர்வுகளை எதிர் கொள்ள கல்லூரி பருவத்திலிருந்து மாணவர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள், பொது அறிவு, பொருளாதாரம், வரலாறு, அறிவியல் என அனைத்து விவரங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும். போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ளும் போது ஒவ்வொரு நாளும் நாம் கண்டிப்பாக 8 மணி நேரம் படிப்பிற்காக செலவிட வேண்டும். போட்டி தேர்வு என்பது கல்லூரி தேர்வு போன்றது அல்ல. ஓட்டப்பந்தயம் போன்றது. முதலில் வருபவர்களுக்கே வெற்றி என்ற அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. போட்டித் தேர்வுகளை எவ்வித தயக்கமும் இன்றி தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்