போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து காரைக்குடியில் 12-ந் தேதி மினி மாரத்தான் போட்டி

போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து காரைக்குடியில் 12-ந் தேதி மினி மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.

Update: 2023-02-09 18:45 GMT

காரைக்குடி, 

சி.ஐ.டி.யு. சம்மேளன மண்டல பொதுச்செயலாளர் தெய்வீரபாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:- நாட்டின் முன்னேற்றம், சமூக பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்து வசதி என்பது முக்கிய பங்கை வகிக்கிறது. இந்தியாவில் 66 சதவீதம் சரக்கு போக்குவரத்தாகவும், 82 சதவீதம் பயணிகள் போக்குவரத்தாகவும் சாலைகள் வழியாக நடக்கிறது. வாகன பெருக்கத்தினால் ஆண்டிற்கு 4 லட்சம் விபத்து ஏற்பட்டு அதில் 1.50 லட்சம் உயிரிழப்பு நடக்கிறது. வாகன பெருக்கத்தினால் சாலை நெருக்கடி, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்படுவதால் சுற்றுச்சூழலை பாதுகாத்து விபத்தை குறைக்க போக்குவரத்தை மேம்படுத்துவது சிறந்த வழியாகும். இதற்காக தமிழ்நாட்டில் உள்ள 27 முக்கிய நகரங்களில் வருகிற 12-ந் தேதி மினி மாரத்தான் போட்டி நடக்கிறது. அதன்படி காரைக்குடியில் வருகிற 12-ந் தேதி காலை 6 மணி முதல் 8 மணி வரை தேவர் சிலையில் இருந்து இந்த போட்டிகள் நடக்கிறது.

இதில் பெண்களுக்கு 3 கிலோ மீட்டர் மினி மாரத்தான் போட்டி தேவர் சிலையில் இருந்து தொடங்கி நூறடி சாலை, பெரியார்சிலை, செக்காலை பேக்கரி, கல்லூரி சாலை ரோடு வழியாக புதிய பஸ் நிலையத்தில் நிறைவு பெறுகிறது. ஆண்களுக்கு 6 கிலோ மீட்டர் ஓட்ட போட்டியாக தேவர் சிலையில் இருந்து தொடங்கி பெரியார் சிலை, கல்லூரி ரோடு, ரெயில்வே ரோடு வழியாக புதிய பஸ் நிலையத்தில் நிறைவு பெறுகிறது. போட்டிக்கு மாங்குடி எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். காரைக்குடி உதவி துணைபோலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் போட்டியை தொடங்கி வைக்கிறார். போட்டியில் முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்