சிறந்த சமூக சேவையாற்றியவர்களுக்கு பரிசு

ராமநாதபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறந்த சமூக சேவையாற்றிய அரசுத்துறையினர் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகளுக்கு பாராட்டி பரிசு வழங்கினார்.

Update: 2023-08-19 18:45 GMT

ராமநாதபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறந்த சமூக சேவையாற்றிய அரசுத்துறையினர் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகளுக்கு பாராட்டி பரிசு வழங்கினார்.

அரசு துறை பணியாளர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த சமூக சேவையாற்றிய அரசுத்துறை பணியாளர்களான தொண்டி பேரூராட்சி வரி தாண்டலர் மங்களநாத சேதுபதி, பட்டணம் காத்தான் ஊராட்சி தற்காலிக துப்புரவு பணியாளர் உடையார், பரமக்குடி நகராட்சி டிரைவர் ராஜேந்திரன், பந்தப்பனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சரவணபூபதி, ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நர்சு புவனி, நயினார்கோவில் யூனியன் பனிதவயல் அங்கன்வாடி பணியாளர் ரீட்டா, ராமேசுவரம் மீன்வளத்துறை மேற்பார்வையாளர் நடேஷ்பாபு, கீழக்கரை கிராம உதவியாளர் பாண்டி, ராமேசுவரம் போக்குவரத்து போலீஸ் ஏட்டு யுவராஜ், கமுதி தீயணைப்பு துறை பணியாளர் பழனி ஆகியோரது சேவைகளை பாராட்டி ராமநாதபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார்.

வேலை கேட்டு மனு

அதேபோல சிறந்த சமூக சேவையாற்றிய தொண்டு நிறுவன நிர்வாகிகள் ராமநாதபுரம் அப்பாஸ் அலி அறக்கட்டளை அமீர் ஹம்ஷா, வள்ளலார் அறக்கட்டளை ராஜவீர், சம்யுக சேவகர் லிடியா, ராமேசுவரம் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் தில்லை பாக்கியம், பரமக்குடி தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை முகமது அலி ஜின்னா ஆகியோரது சேவைகளை பாராட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார். மேலும் முதல்-அமைச்சரிடம் வேலை கேட்டு மனு கொடுத்த முதுகுளத்தூரை சேர்ந்த நாககுமரன் என்ற மாற்றுத்திறனாளிக்கு ஊரக வளர்ச்சித்துறையில் தற்காலிக பணியாளராக பணி நியமன ஆணையை வழங்கினார்.

மரக்கன்றுகள் நடும் பணி

முதல்-அமைச்சரின் கனவு திட்டமான பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் வனப்பரப்பை அதிகரிக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 கோடி மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு பல்வேறு துறைகளின் மூலம் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பெருநெல்லி, வாகை, மூங்கில், ஆலமரம், அரசமரம், அத்தி, விளாம்பழம், ஆவிமரம், கொடுக்காப்புளி, புங்கன், வன்னி, கொய்யா, பூவரசு போன்ற மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த 1 கோடி மரக்கன்றுகள் நடும் பணியினை ராமநாதபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி தொடங்கி வைத்தார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நிறைவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர்கள் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், ராஜகண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், கலெக்டர் விஷ்ணு சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதாஹனீப் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்