ஏ.வி.எம். பாரம்பரிய அருங்காட்சியகம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோ வளாகத்தில் பழமையான திரைப்பட கருவிகள், கார்கள் அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2023-05-07 23:15 GMT

சென்னை,

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். நிறுவனம், இதுவரை 178 திரைப்படங்களை தயாரித்துள்ளது. கருப்பு-வெள்ளையில் தொடங்கி டிஜிட்டல் வரை தொழில்நுட்பம் முன்னேறிய நிலையில், தங்களது பழைய மற்றும் காலத்துக்கேற்ப மாறிய திரைப்பட கருவிகளை காட்சிப்படுத்துவது என ஏ.வி.எம். நிறுவனம் முடிவு செய்தது.

இதில் பராமரித்து வரும் பாரம்பரிய கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களையும் காட்சிப்படுத்த ஏ.வி.எம். நிறுவன உரிமையாளர் எம்.எஸ்.குகன் விரும்பினார். அதன்படி, ஏ.வி.எம். ஸ்டூடியோ வளாகத்தில் சென்டிரல் ஜெயில் 'செட்' அருகிலேயே அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்து வந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில், பழமையான திரைப்பட கருவிகள் அருங்காட்சியகம் மற்றும் பாரம்பரிய கார்கள் கண்காட்சி தொடக்க விழா நேற்று நடந்தது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஏ.வி.எம். நிறுவன உரிமையாளர் ஏ.வி.எம்.சரவணன் தலைமையில் நடந்த விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.

இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, டி.ஆர்.பாலு எம்.பி., நடிகர்கள் சிவகுமார், கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர்கள் எம்.எஸ்.குகன், அருணா குகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கண்காட்சியில் இடம் பெற்ற பழமையான கார்களையும், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் திரைப்பட கருவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆர்வத்துடன் பார்வையிட்டார். அப்போது, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி திரைக்கதை-வசனம் எழுதி வெளியான 'பராசக்தி' படம் திரைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி நிறுவப்பட்ட நினைவு சின்னத்தை மு.க.ஸ்டாலின் ஆர்வத்துடன் பார்த்தார். அதனுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். ஏ.வி.மெய்யப்ப செட்டியார் சிலை முன்பாகவும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.

பழமையான கார்கள் - மோட்டார் சைக்கிள்கள்

இந்த கண்காட்சியில் 'முரட்டுக்காளை', 'சகலகலா வல்லவன்', 'முந்தானை முடிச்சு', 'சம்சாரம் அது மின்சாரம்', 'எஜமான்' ஆகிய படங்களில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், ஆடியோ-வீடியோ சாதனங்கள் வைக்கப்பட்டு உள்ளன. ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' படத்தில் பயன்படுத்தப்பட்ட எம்.ஜி. டி.பி. ரக கார் வைக்கப்பட்டு உள்ளது.

'போர்டு', ''வோக்ஸ்வேகன்', 'வாக்ஸ்ஹால்', 'பியட்', 'டாட்ஜ்', 'பென்ஸ்', 'கேட்டிலக்', 'பியூக்', 'ஸ்டாண்டர்டு', 'டிரையம்ப்', 'இந்துஸ்தான்', 'ஆஸ்டின்', 'சிட்ரியன்', 'ஈனோஸ்' உள்பட 1910-ல் இருந்து 2000 ஆண்டு வரையிலான 40-க்கும் மேற்பட்ட பாரம்பரிய கார்கள், 'எம்.வி.அகஸ்டா', 'டிரையம்ப்', 'டீவூ', 'பஜாஜ்', 'ஹோண்டா', 'லேம்பிரெடா', 'விஜய் சூப்பர்', 'பி.எஸ்.ஏ.' உள்பட 15-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் வைக்கப்பட்டு உள்ளன.

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார்

குறிப்பாக எம்.ஜி.ஆர். பயன்படுத்திய 'டாட்ஜ் கிங்க்ஸ்வே' கார், ஜெமினி ஸ்டூடியோ உரிமையாளர் எஸ்.எஸ்.வாசன் பயன்படுத்திய 'வாக்ஸ்ஹால் வெலாக்ஸ்', ஏ.வி.மெய்யப்ப செட்டியார் பயன்படுத்திய 'வாக்ஸ்ஹால் 14' மற்றும் 'பியூக் சூப்பர் 8' கார்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை பொதுமக்களும் நேற்று ஆர்வமுடன் கண்டுரசித்தனர்.

3 மாதத்துக்கு ஒருமுறை...

இதுகுறித்து ஏ.வி.எம். உரிமையாளர் எம்.எஸ்.குகன் கூறியதாவது:-

இது நிரந்தர கண்காட்சி ஆகும். ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சியை மக்கள் பார்வையிடலாம். செவ்வாய்க்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் மூடப்படும். பெரியவர்களுக்கு ரூ.200-ம், சிறியவர்களுக்கு ரூ.150-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

3 மாதத்துக்கு ஒருமுறை புதிய பொருட்களையும் அறிமுகப்படுத்துவோம். சிறியவர்களுக்கு கட்டணத்தை குறைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்