அவினாசி கோவில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2023-06-04 16:00 GMT


அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக கோவில் செயல் அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று பொன்மாணிக்கவேல் கூறினார்.

ஆய்வு

அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த மாதம் 22-ந்தேதி இரவு புகுந்த ஒரு ஆசாமி அங்கிருந்த சிலைகள் மற்றும் உண்டியலை சேதப்படுத்தியதுடன் கருவறைக்குள் புகுந்து பூஜை பொருட்களை தாறுமாறாக தூக்கி வீசி எறிந்துள்ளார். இந்த நிலையில் இந்த கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவனடியார்கள் மத்தியில் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அதனை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளது வரவேற்கத்தக்கது.

குற்றவாளி மனநோயாளியா, இல்லையா என்பதை நிரூபிக்க சட்டப்படி அரசு மருத்துவமனை மன நல மருத்துவரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும்.

தரமான பூட்டு

கோவில் கருவறை பூட்டப்பட்டிருந்ததால் உடைக்கப்பட்ட பூட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும். கோவில் சுவாமி சன்னிதானங்களுக்கு தரமான பூட்டு போட வேண்டும். மேலும் கோவிலில் கடந்த 22-ந்தேதி இரவு 8 மணி முதல் 23-ந்தேதி காலை 7 மணி வரையிலான கண்காணிப்பு கேமரா காட்சிகள் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு கோவிலில் நடந்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட செயல் அலுவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். துறை ரீதியான நடவடிக்கை முடியும் வரை அவருடைய தற்காலிக பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக்கூடாது.

பயோமெட்ரிக் முறை

அதேபோல் சம்பந்தப்பட்ட இணை ஆணையரை இடமாற்றம் செய்து அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலில் செயல் அலுவலர் காலை 5 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இருக்க வேண்டும். செயல் அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் உரிய நேரத்திற்கு வருகை தருகிறார்களா என்பதை கண்டறிய பயோமெட்ரிக் முறையை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்