திருச்செந்தூரில் ஆவணி திருவிழா; சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் வீதிஉலா

திருச்செந்தூரில் ஆவணி திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் வீதிஉலா நடந்தது.

Update: 2023-09-12 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழாவின் 9-ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுதருளி வீதி உலா வந்தனர்.

ஆவணித்திருவிழா

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழா நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

வெள்ளி குதிரை வாகனத்தில்...

9-ம் திருநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பகலில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுதருளி வீதி உலா வந்தனர். பின்னர் நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்திய பின்னர், மீண்டும் காமராஜர் சாலை, உள்மாட வீதி வழியாக வந்து மேலக்கோவிலை அடைந்தனர்.

இரவில் சன்னதி தெருவில் உள்ள பூச்சிக்காடு அருணாசலத்தேவர் வகையறா மண்டபத்தில் இருந்து சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளினர். பின்னர் தேர் கடாட்சம் அருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. முதலில் விநாயகர் தேர் வெளிவீதி நான்கிலும் பவனி வந்து நிலையை சேரும். பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய தேரும், அடுத்து வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேரும் வெளிவீதிகளில் பவனி வந்து நிலையை அடையும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இரவு சுவாமி, அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலை அடைகிறார்கள்.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்