தானியங்கி குடிநீர் எந்திரத்தில் பழுது நீக்கப்பட்டது

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள தானியங்கி குடிநீர் எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக எந்திரத்தில் பழுது நீக்கப்பட்டது.

Update: 2022-10-16 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள தானியங்கி குடிநீர் எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக எந்திரத்தில் பழுது நீக்கப்பட்டது.

தண்ணீர் இல்லை

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை விற்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 70 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் 1, 2 மற்றும் 5 ரூபாய் நாணயங்களை போட்டு குடிநீரை பிடித்து பயன்படுத்தி வந்தனர். இந்த தானியங்கி எந்திரங்கள் அடிக்கடி பழுதாகி வந்தன. எந்திரங்கள் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் ஏ.டி.எம். எந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த எந்திரத்தில் தண்ணீர் இல்லாமல் பழுது ஏற்பட்டது.

பழுது நீக்கப்பட்டது

இதனால் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும் எந்திரத்தில் தண்ணீர் இல்லை என எல்.இ.டி. திரையில் தெரிந்தது. இதுகுறித்து கடந்த 15-ந் தேதி தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் உத்தரவின்படி, செயற்பொறியாளர் மோகன்ராஜ், தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள குடிநீர் ஏ.டி.எம். எந்திரத்தில் பழுதடைந்து இருந்த குடிநீர் குழாயை மாற்றி, பழுதை நீக்கினார். அதன் பின்னர் எந்திரத்தில் பழுது நீக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. இதனால் குடிநீர் ஏ.டி.எம். எந்திரத்தை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். மேலும் பொதுமக்கள் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்