கும்பக்கரை அருவி பகுதியில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரம்

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி பகுதியில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-26 20:45 GMT

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி, திண்டுக்கல் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அதேபோல் வெளி மாநிலங்களில் இருந்து கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் கும்பக்கரை அருவிக்கு வந்து செல்கின்றனர். இந்தநிலையில் சுற்றுலா பயணிகள் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவின்பேரில் கீழவடகரை ஊராட்சி சார்பில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரத்தை கும்பக்கரை அருவி பகுதியில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த எந்திரத்தில் 10 ரூபாய் நாணயத்தை செலுத்தினால் மஞ்சப்பை வந்துவிடும். பின்னர் அந்த மஞ்சப்பையை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதற்கிடையே மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமை தாங்கி, தானியங்கி எந்திரத்தின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய் மாலா, துணை மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம், ஊராட்சி செயலாளர் ஜெயபாண்டியன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் 10 ரூபாய் நாணயத்தை தானியங்கி எந்திரத்தில் செலுத்தி மஞ்சப்பையை பெற்றுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்