பயணிகளுக்கு உதவ தானியங்கி ரோபோக்கள்
கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ தானியங்கி ரோபோக்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.
கோவை,
கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ தானியங்கி ரோபோக்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.
சர்வதேச விமான நிலையம்
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பிற நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கோவையில் இருந்து தினமும் 20-க்கு மேற்பட்ட விமானங்களில் ஏராளமான பயணிகள் பயணித்து வருகின்றனர். கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவ தனி உதவி மையம் விமான நிலையத்திலேயே உள்ளது. அந்த உதவி மையத்தை செல்போன் மூலம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான தகவல்களை பயணிகள் பெற்று வருகிறார்கள்.
தானியங்கி ரோபோக்கள்
இந்த நிலையில் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் தானியங்கி ரோபோக்கள் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த அதிநவீன ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவு கொண்டு உள்ளது. இதன்மூலம் பயணிகளுக்கு தேவையான தகவல்களை எவ்வித உதவியும் இன்றி வழங்க முடியும். இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் 2 ரோபோக்கள் நாளை (இன்று) காலை அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்திலும், மற்றொரு ரோபா விமான வருகை முனையத்திலும் நிறுத்தப்படும். இந்த ரோபா யாரின் உதவியும் இன்றி தானாக நகரும் தன்மை கொண்டது.
செயற்கை நுண்ணறிவு
மேலும் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை வரவேற்று, அவர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்கும். இதற்காக அந்த ரோபோக்களில் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்டு உள்ளது. பயணிகள் உதவி மையத்தை தொடர்பு கொள்ள விரும்பினால், ரோபோ உடனடியாக உதவி மையத்தை தொடர்பு கொண்டு தகவல்களை அளிக்கும்.
இந்த ரோபோக்கள் பயணிகள் விமானத்திற்கு செல்ல வேண்டிய வழி, பாஸ்போர்ட் சரிபார்ப்பு இடம் உள்ளிட்ட இடங்களுக்கான வழிகளை பயணிகளுக்கு தெரிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.