ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்க கோரி ஆட்டோ தொழிலாளர்கள் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் நேற்று காலை டூவிபுரம் 5-வது தெரு, அண்ணாநகர் மெயின் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் இசக்கி முத்துக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி,பி.ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணம் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பிறகு பெட்ரோல், டீசல், எரிவாயு, வாகனங்கள் விலை அதிகரித்து உள்ளது. ஆனாலும் ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. ஆகையால் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றை மத்திய, மாநில அரசு ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டுவர வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வது போன்று, ஆட்டோ தொழிலாளர்களுக்கும் அரசு வீடு திட்டத்தில் முன்னுரிமை தந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும். போக்குவரத்து விதிமீறல் செய்தால் ஆட்டோவை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்து ஆட்டோ ஓட்டுனரின் கையொப்பத்துடன் ஓட்டுனர் உரிமம் எண், பெயர் ஆகியவற்றுடன் அபராதம் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் இந்து ஆட்டோ முன்னணி பொறுப்பாளர்கள் செல்வகணேஷ், கணேஷ், ரவிச்சந்தர், மணிவண்ணன், திருப்பதி, வெங்கடேஷ், சுப்புராயலு, சக்திவேல், மோகன்ராஜ், ஸ்ரீரங்கன், அந்தோணி செல்வபிரபு, அய்யப்பன், சுயம்புலிங்கம், சுரேஷ், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் நாராயண்ராஜ், மாவட்ட செயலாளர் குமார், செயற்குழு உறுப்பினர் பலவேசம், இந்து முன்னணி வக்கீ்ல் பிரிவு செயலாளர் கருப்பசாமி, இந்து இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கவின், ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர் சிபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.