ஆட்டோ டிரைவர் பீர்பாட்டிலால் குத்திக் கொலை

களியக்காவிளை அருகே திருமண மது விருந்தில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவரை பீர்பாட்டிலால் அவருடைய நண்பர்கள் குத்திக் கொன்றனர்.

Update: 2023-01-23 18:45 GMT

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே திருமண மது விருந்தில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவரை பீர்பாட்டிலால் அவருடைய நண்பர்கள் குத்திக் கொன்றனர்.

மது விருந்தில் தகராறு

குமரி-கேரள எல்லை பகுதியான களியக்காவிளை அருகே உள்ள இஞ்சிவிளை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 40), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். திருமணம் முடிந்த பிறகு மது விருந்து நடந்துள்ளது.

இதில் ரஞ்சித் மற்றும் அவருடைய நண்பர்கள் விபிஜ் (35), ரிஜூ (36), ரெஜி (40) ஆகியோர் பங்கேற்றனர். மதுவை குடித்த பிறகு போதை தலைக்கேறியதும் ரஞ்சித்துக்கும், மற்ற நண்பர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் திருமண வீட்டார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

பீர்பாட்டிலால் குத்திக்கொலை

உடனே ரஞ்சித் அவருடைய ஆட்டோவில் வீட்டுக்கு சென்று விட்டார். ஆனால் மற்ற 3 நண்பர்களும் மீண்டும் மது குடித்தனர். அப்போது ரஞ்சித்திற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என 3 பேரும் முடிவு செய்தனர்.

தொடர்ந்து ரஞ்சித் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டதோடு திடீரென பீர்பாட்டிலால் அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் உடைந்த பாட்டிலால் கழுத்து, தலை ஆகிய இடங்களில் குத்தியதில் ரஞ்சித் படுகாயமடைந்து அதே இடத்திலேயே சாய்ந்தார். சத்தம் கேட்டு அங்கு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே 3 பேரும் அங்கிருந்து தப்பி விட்டனர். இதற்கிடையே உயிருக்கு போராடிய ரஞ்சித் அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

பரபரப்பு

மேலும் இதுபற்றி தகவல் அறிந்த பாறசாலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாறசாலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரிஜூ, ரெஜியை கைது செய்தனர். மற்றொருவரை தேடிவருகின்றனர். மது விருந்தில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவரை நண்பர்கள் குத்திக் கொன்ற சம்பவம் களியக்காவிளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்