அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களில் அதிகாரிகள் கூட்டாக ஆய்வு செய்ய வேண்டும் கலெக்டர் அரவிந்த் உத்தரவு

அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களில் அதிகாரிகள் கூட்டாக ஆய்வு செய்ய வேண்டும் என கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-12-12 21:26 GMT

நாகர்கோவில்:

அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களில் அதிகாரிகள் கூட்டாக ஆய்வு செய்ய வேண்டும் என கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வு கூட்டம்

குமரி மாவட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஆய்வு கூட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

கடந்த அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை பராமரிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட துறையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலெக்டரால் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

போலீசார் நடவடிக்கை

அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் இடங்களில் அவற்றை தவிர்த்திடும் வகையில் நிரந்தர தீர்வு காண்பது குறித்து காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூட்டாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். முக்கிய சாலைகளில் மின்விளக்குகள் மற்றும் பழுது பார்க்கப்பட வேண்டிய சாலைகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும். கூட்ட நெரிசல் மிகுந்த நகர மற்றும் மாநகர பகுதிகளில் ஆபத்தான மின்கம்பங்கள் மற்றும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் ஏற்கனவே இருந்த மின்கம்பங்களை மாற்றி இடையூறில்லாமல் சாலை போக்குவரத்து மேம்பட நடவடிக்கை மேற்கொள்ள மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள்

இந்த கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மனாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், நாகர்கோவில், மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்