கல்லூரி மாணவர் உள்பட 5 பேரை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

கேரளாவில் இருந்து காய்ச்சல் அறிகுறியுடன் குமரிக்கு வந்த கல்லூரி மாணவன் உள்பட 5 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

Update: 2023-09-15 20:54 GMT

நாகர்கோவில்:

கேரளாவில் இருந்து காய்ச்சல் அறிகுறியுடன் குமரிக்கு வந்த கல்லூரி மாணவன் உள்பட 5 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

அதிகாரிகள் சோதனை

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தாக்கி 2 பேர் பலியானார்கள். மேலும் சிலர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்திலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் கேரளா-குமரி எல்லைகளில் உள்ள 5 சோதனை சாவடிகளில் போலீசாருடன் இணைந்து அதிகாரிகள் கண்காணிப்பு சோதனையை பலப்படுத்தி உள்ளனர்.

கேரளாவில் இருந்து குமரிக்கு வரும் வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டு, அதில் காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் யாராவது உள்ளார்களா? என தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை நடக்கிறது.

3 பேர் திருப்பி அனுப்பி வைப்பு

இதில் நேற்று மட்டும் பாறசாலையை சோ்ந்த தந்தை மற்றும் மகன் ஒரு காரிலும், மற்றொரு காரில் பூவார் பகுதியை சேர்ந்த வாலிபரும் வந்தனர். அவர்களை களியக்காவிளை சோதனைச் சாவடியில் சோதனை செய்த போது தந்தையுடன் வந்த வாலிபருக்கும், பூவாரை சேர்ந்த வாலிபருக்கும் காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரிய வந்தது. உடனே சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை குமரி மாவட்டத்திற்குள் விடாமல் மீண்டும் கேரளாவுக்கு திரும்பி செல்லும்படி கூறினார். இதில் தந்தையுடன் வந்தவர் கல்லூரி மாணவர். இதனை தொடர்ந்து 3 பேரும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

அந்த வகையில் கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் காய்ச்சல் அறிகுறி இருந்த 5 பேரை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ஏராளமான கட்டுமான தொழிலாளர்களும், மீனவர்களும் சென்று வருகிறார்கள். அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

டெங்கு அதிகரிப்பு

நிபா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையே குமரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தினமும் 2 முதல் 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 1 வாரத்தில் மட்டும் 22 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளிலும், வீட்டில் இருந்தபடியும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்