வீட்டை ஜப்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை: எறும்பு மருந்து சாப்பிட்டு பெண் தற்கொலை முயற்சி

வேப்பந்தட்டை அருகே வீட்டை ஜப்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் எறும்பு மருந்து சாப்பிட்டு பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-11 18:48 GMT

ஜப்தி உத்தரவு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் அங்கமுத்து, விவசாயி. இவரது மனைவி கமலா (வயது 35). இவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் சேலத்தில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.28 லட்சத்து 98 ஆயிரத்து 470 கடன் பெற்று மெத்தை வீடு கட்டியுள்ளனர்.

இந்த வீடு கட்டுவதற்கு வாங்கிய கடன் தொகையில் கடந்த 20 மாதமாக தவணைத் தொகையை திருப்பி செலுத்தப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் வங்கி நிர்வாகத்தின் சார்பில் பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஜப்தி உத்தரவு பெற்றனர்.

தற்கொலை முயற்சி

இதையடுத்து நேற்று அரும்பாவூர் போலீசார் முன்னிலையில் வங்கி ஊழியர்கள் வீட்டை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வங்கி ஊழியர்கள் வீட்டை ஜப்தி செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வீட்டிலிருந்த எறும்பு மருந்தை (விஷம்) கமலா எடுத்து சாப்பிட்டு விட்டார். இதனைதொடர்ந்து அருகில் இருந்தவர்கள் கமலாவை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்