ஆவின் பால் பண்ணை மேலாளர் பணி இடைநீக்கம்

நெல்லையில் ஆவின் பால் பண்ணையில் நடந்த பால் திருட்டு சம்பவம் தொடர்பாக பண்ணை மேலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-03-11 19:10 GMT

நெல்லையில் ஆவின் பால் பண்ணையில் நடந்த பால் திருட்டு சம்பவம் தொடர்பாக பண்ணை மேலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பால் திருட்டு

நெல்லை ரெட்டியார்பட்டியில் ஆவின் பால் பண்ணை அமைந்துள்ளது. இங்கிருந்து பால் பாக்கெட்டுகள் வாகனங்கள் மூலம் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட ஒரு வாகனத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது 202 லிட்டர் பால் பாக்கெட்டுகள் திருடி எடுத்துச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் சார்பில், பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.

பண்ணை மேலாளர் பணி இடைநீக்கம்

இந்தநிலையில் பால் திருட்டு சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது இதற்கிடையே சம்பவம் தொடர்பாக பால் பண்ணை மேலாளர் நேற்று அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து நெல்லை ஆவின் பால் பண்ணை பொது மேலாளர் தியானேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆவின் பால் பண்ணையில் இருந்து மாவட்ட, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பால் வினியோகம் செய்யும் 6-வது வழித்தட வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு 202 லிட்டர் பால் திருடிச் செல்லப்பட்டது கண்டறியப்பட்டது. பணியில் இருந்த சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மற்றும் வாகன டிரைவர்களை கைது செய்து காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதை தொடர்ந்து பண்ணை மேலாளரும், உதவி பொது மேலாளராகவும் பொறுப்பு வகித்து வந்த ஜான் சுனில் என்பவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய அதிகாரி

அவருக்கு பதிலாக வள்ளியூர் பால் குளிரூட்டும் நிலைய பொறுப்பாளர் நிர்மல் ஞானசேகர், நெல்லை ஆவின் பண்ணை மேலாளராக கூடுதல் பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்