வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கத்தரிக்காய் விளைச்சல் அமோகம்-விவசாயிகள் மகிழ்ச்சி

வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கத்தரிக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-09-11 18:45 GMT

வேப்பனப்பள்ளி:

கத்தரிக்காய் விளைச்சல் அமோகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் பல்வேறு வகையான காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு விளைவிக்கப்படும் காய்கறிகள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான பண்ணப்பள்ளி, மணவாரப்பள்ளி, பதிமடுகு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது இந்த பகுதிகளில் கத்தரிக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மட்டுமின்றி வெளிமாவட்டங்களுக்கும் அதிகளவில் கத்தரிக்காய் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

வரத்து அதிகரிப்பால் விலை குறைவு

சராசரியாக ஒரு ஏக்கருக்கு 2 டன் வரை மகசூல் கிடைக்கும் வகையில் விளைச்சல் அதிகரித்து உள்ளதால் இதனால் கடந்த மாதம் வரை கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையாகி வந்த கத்தரிக்காய், தற்போது ரூ.15 முதல் ரூ.25 வரையே கொள்முதல் செய்யப்படுகிறது.

விளைச்சல் அதிகரித்து மார்க்கெட்டுக்கு கத்தரிக்காய் வரத்து அதிகரித்து உள்ளதால் அதன் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் ஆதங்கப்பட்டாலும், விளைச்சல் அதிகரித்து உள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டாரத்தில் தற்போது கத்திரிக்காய் எடுப்பு பணி மும்முரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்