அரசு பள்ளிகளில் கதவை உடைத்து கொள்ளை முயற்சி

இரணியல் அருகே அரசு பள்ளிகளில் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-07-17 18:45 GMT

திங்கள்சந்தை:

இரணியல் அருகே அரசு பள்ளிகளில் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

அரசு பள்ளிகள்

இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளையில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. அரசு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜோஸ் பிரகாஷ், மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக ரைமண்ட் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலையில் ஊழியர்கள் பள்ளியை திறக்க வந்த போது 2 பள்ளிக்கூட கதவுகளும் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

உடனே இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கண்காணிப்பு கேமரா

பின்னர் பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள 9 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் மர்மஆசாமி ஒருவர் பள்ளிக்கூட வளாகத்துக்குள் நுழைந்து சென்ட்ரிங் வேலைகளுக்கு பயன்படுத்தும் இரும்பு கம்பியால் கதவுகளை நெம்பி உடைக்கிறார். பின்னர் உள்ளே சென்று திருடும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

முதலில் அவர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறை கதவை உடைத்து உள்ளே புகுந்த அவர் அங்கிருந்த சாவியை எடுத்து பீரோக்களை திறந்து உள்ளார். ஆனால் பணம் உள்ளிட்ட எதுவும் அவரிடம் சிக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த ஆசாமி அங்கிருந்து வெளியேறி அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்று கதவை உடைத்து திருட முயன்றுள்ளார்.

அங்கும் எதுவும் கிடைக்காததால் வெளியே வரும்போது ஒரு கண்காணிப்பு கேமராவை பார்க்கிறார். ஆத்திரத்தில் அந்த கேமராவை உடைப்பது போன்று காட்சிகள் பதிவாகியிருந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

போலீசில் புகார்

மேலும் இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பள்ளிகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்