கண்டமனூர் அருகே 5 வீடுகளில் கதவை உடைத்து கொள்ளை முயற்சி

கண்டமனூர் அருகே அடுத்தடுத்த 5 வீடுகளில் கதவை உடைத்து முகமூடி அணிந்த 2 பேர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-20 17:46 GMT

கண்டமனூர் அருகே அடுத்தடுத்த 5 வீடுகளில் கதவை உடைத்து முகமூடி அணிந்த 2 பேர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

கொள்ளை முயற்சி

கண்டமனூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அன்னகாமு. இவர் இன்று காலை நடைபயிற்சி செல்வதற்காக வீட்டின் கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது வாசல் கதவின் முன்புறம் கடப்பாரையால் குத்தி சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக இதுகுறித்து கண்டமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அன்னகாமுவின் வீட்டை பார்வையிட்டனர். அப்போது மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதேபோல் அன்னகாமு வீட்டின் அருகே வசிக்கும் துரைச்சாமி, வினோத்குமார், பால்சாமி, காமுத்தாய் ஆகிய 4 பேரின் வீடுகளிலும் கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்தது. இதில் காமுத்தாய் என்பவரது வீட்டில் யாரும் இல்லை. இதனால் மர்மநபர்கள், அவரது வீட்டுக்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த ரூ.25 ஆயிரத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.

முகமூடி அணிந்து...

இதற்கிடையே கொள்ளை முயற்சி நடந்த வீடுகளில், வினோத்குமார் என்பவரது வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து அதில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது நள்ளிரவு 2 மணி அளவில் மர்ம நபர்கள் 2 பேர் முகத்தை துணியால் மூடியபடி கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன், கடப்பாரையை கொண்டு வீட்டின் கதவை உடைக்க முயற்சி செய்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதே நபர்கள் தான் மற்ற வீடுகளிலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

அடுத்தடுத்த 5 வீடுகளில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்