ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
சேலம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் 3 பேர் சிக்கினர்.
ஓமலூர்
சேலம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் 3 பேர் சிக்கினர்.
ஏ.டி.எம். எந்திரம்
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே உள்ள ஜோடுகுளியை சேர்ந்தவர் செல்வம் (வயது 63), ஓய்வுபெற்ற அரசு பஸ் டிரைவர். இவருடைய வீட்டு கட்டிடத்தின் 2 அறைகளில் 2 ஏ.டி.எம். மையங்கள் இயங்கி வருகின்றன.
நேற்று அதிகாலை 3 மணியளவில் ஏ.டி.எம். மையத்தில் இருந்து எந்திரத்தை உடைப்பது போன்று சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டு இருந்த செல்வம் திடுக்கிட்டு விழித்தார். பின்னர் அவர் வீட்டின் வெளியே வந்து பார்த்தார்.
அப்போது ஏ.டி.எம். மையத்தின் முன்பு ஒருவர் நிற்பதை பார்த்து யார் அவர்? என விசாரித்தார். அதே நேரத்தில் அந்த மர்ம நபர் ஏ.டி.எம். எந்திர சட்டரை இறக்கி விட்டு, விட்டு முன்னால் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பி செல்ல முயன்றார்.
சரக்கு வாகனத்தில் தப்பிய வாலிபர்
மோட்டார் சைக்கிள் ஸ்டார்ட் ஆகாததால் அப்படியே விட்டு விட்டு அருகில் நிறுத்தி இருந்த சரக்கு வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதையடுத்து சுதாரித்த செல்வம், அந்த மோட்டார் சைக்கிளை தனது வீட்டின் அருகே தள்ளிக்கொண்டு வந்்து நிறுத்தினார்.
பின்னர் அவர் ஏ.டி.எம். மையத்தில் வேறு சிலர் இருப்பதை அறிந்து சுதாரித்து வீட்டில் இருந்த பூட்டு ஒன்றை எடுத்துக்கொண்டு ஏ.டி.எம். மையத்திற்கு வந்தார். அங்கு அவர் சட்டரை பூட்டிவிட்டு தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
2 பேர் சிக்கினர்
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீவட்டிப்பட்டி போலீசார், ஏ.டி.எம். மையத்தின் கதவு பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு இருந்த 2 வாலிபர்கள் வெல்டிங் எந்திரத்தை கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்று கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நிஷால் கான் (22), உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாஜிக்கான் (20) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களுடன் வந்து சரக்கு வாகனத்தில் தப்பிச்சென்றது, அரியானா மாநிலத்தை சேர்ந்த ரபாகத் அலி (30) என தெரியவந்தது.
இதனிடையே தகவல் கிடைத்ததும் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்தார். அங்கு மையத்தில் கொள்ளையர்கள் வைத்திருந்த வெல்டிங் எந்திரத்தையும் பார்வையிட்டார்.
அதே நேரத்தில் சரக்கு வாகனத்தில் தப்பிச்சென்ற ரபாகத் அலியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு துரிதகதியில் தேட தொடங்கினர். இதில் அவர் சரக்கு வாகனத்துடன் அவினாசி பகுதியில் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ததுடன், வாகனத்தையும் பறிமுதல் செய்து தீவட்டிப்பட்டிக்கு கொண்டு வந்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
இந்த சம்பவத்தில் கொள்ளையர்களை சமயோசிதமாக பிடிக்க உதவிய ஓய்வுபெற்ற அரசு பஸ் டிரைவர் செல்வத்தை போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் பாராட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வடமாநில கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை வெல்டிங் எந்திரத்தின் மூலம் உடைத்து சரக்கு வாகனத்தில் எடுத்து செல்ல முயன்றுள்ளனர். அவர்களை செல்வம் என்பவர் திறமையாக பிடித்துள்ளார்.
போலீஸ் துறை சார்பில் அவரை பாராட்டுகிறேன். பொதுமக்கள் அனைவரும் இவரை போல செயல்பட்டு திருட்டு, கொள்ளையை தடுக்க வேண்டும். போலீசார் அனைத்து இடத்திலும் இருக்க முடியாது. பொதுமக்கள் அனைத்து இடத்திலும் இருப்பார்கள். அதனால் மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்களா? இவர்களுடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.