பேராசிரியர் வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி
நெல்லை அருகே பேராசிரியர் வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.
பேட்டை:
நெல்லை அருகே பேட்டையை அடுத்த சுத்தமல்லி கொண்டாநகரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் காதர் முகைதீன் மகன் நவாஸ் (வயது 37). இவர் திருப்பதி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பேட்டையில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறையில் வீடு திரும்பிய நவாஸ் கொண்டாநகரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டினுடைய முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நவாஸ், சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜீன் குமார் வழக்குப்பதிவு செய்து வீட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகிறார்.