சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்புகுடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி

Update: 2023-06-15 19:50 GMT

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே நாச்சினம்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 65). விவசாயியான இவர், நேற்று தனது மனைவி ருக்குமணி, மகன், மருமகள் மற்றும் 3 பேரக்குழந்தைகளுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்து பாட்டிலில் கொண்டு வந்த மண்எண்ணெய் எடுத்து உடலில் ஊற்ற முயன்றனர். அதற்குள் அங்கிருந்த போலீசார் வேகமாக வந்து அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் பழனிசாமி, ருக்குமணி ஆகியோர் கூறியதாவது:-

தங்களுக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை மூத்த மகன் மிரட்டி எழுதி வாங்கி கொண்டார். மேலும் அவர் தற்போது எங்களை வீட்டைவிட்டு வெளியே செல்லுமாறு தொந்தரவு கொடுத்து வருகிறார். இதனால் மனவேதனை அடைந்த நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்யும் நோக்கத்தில் இங்கு வந்தோம். மேலும் மூத்த மகன் எழுதி வாங்கி கொண்ட இடத்தின் கிரயத்தை ரத்து செய்து விட்டு நிலத்தை மீட்டு தரவேண்டும். எங்களது காலத்துக்கு பிறகு அந்த நிலத்தை 2 மகன்களும் சமமாக பிரித்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் இதுபோன்ற செயலில் ஈடுபட கூடாது என்று எச்சரித்தனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று அதிகாரிகளை சந்தித்து இதுதொடர்பாக மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்