பிரியாணி கடை உரிமையாளர் தீக்குளிக்க முயற்சி
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரியாணி கடை உரிமையாளர் தீக்குளிக்க முயன்றார்.
சேலம் முகமது புறா பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் (வயது 59). இவர் அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இப்ராஹிம் நேற்று இரவு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மொபட்டில் வந்தார். பின்னர் அவர் திடீரென தான் கேனில் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் விரைந்து சென்று அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர் கூறும் போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது புறா பகுதியில் உள்ள ஓட்டலில் நடைபெற்ற மோதலில் ஷாஜகான் என்பவர் தாக்கப்பட்டார். இதையடுத்து அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் சாலை மறியல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் சிலர் தூண்டுதலின் பேரில் இந்த மோதல் வழக்கு தொடர்பாக எனது மகனை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்தில் இங்கு வந்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.