தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

மனைவி, குழந்தையை மீட்டுத்தரக்கோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2023-04-24 18:45 GMT

கடலூர்

தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்களை, நுழைவு வாயிலில் பாதுகாப்புக்காக நின்ற போலீசார் தீவிர சோதனை நடத்திய பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர்.

அப்போது தொழிலாளி ஒருவர் திடீரென தான் கையில் கொண்டு வந்த பாட்டிலில் இருந்து பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதை பார்த்த போலீசார், உடனே அவரை தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். தொடர்ந்து அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பண்ருட்டி அருகே தோப்பிருப்பு மருங்கூரை சேர்ந்த ஜெயபாலன் மகன் லிங்கமூர்த்தி (வயது 27) என்றும், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி என்றும் தெரிந்தது.

மீட்டுத்தர வேண்டும்

அவர் தன்னுடைய மனைவி சினேகாவை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட தாகவும், தற்போது அவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ள நிலையில், அவர்கள் 2 பேரையும் அவரது சகோதரர் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டதாகவும், அவர்கள் 2 பேரையும் மீட்டுத்தர வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, பெட்ரோலை ஊற்றியது தெரிந்தது.

இதையடுத்து அவரை போலீசார் எச்சரித்து, அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்