மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி

மகளை கண்டுபிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-04-03 18:10 GMT

தீக்குளிக்க முயற்சி

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை, குறைகள் மனுக்களை பெற்றனர். வேலூர் பாகாயம் சஞ்சீவிபுரத்தை சேர்ந்த செல்வி (வயது 35) என்பவர் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.

குறைதீர்வு கூட்டம் நடந்து கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கம் முன்பு அவர் திடீரென பையில் மறைத்து எடுத்து வந்திருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். பின்னர் செல்வியின் உடலில் தண்ணீரை ஊற்றி அவரை சமாதானம் செய்து விசாரித்தனர்.

மகளை கண்டுபிடிக்க கோரிக்கை

அப்போது அவர் கூறுகையில், எனது மகள் தொரப்பாடியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தாள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பள்ளிக்கு சென்ற அவளை சஞ்சீவிபுரத்தை சேர்ந்த வாலிபர் கடத்தி சென்று விட்டார். கடந்த 2021-ம் ஆண்டும் அவன் இதுபோன்று எனது மகளை சென்னைக்கு கடத்தி சென்றான். அதன்பின்னர் அவனிடமிருந்து மகளை மீட்டோம். இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் அளித்தேன். ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனது மகளை கடத்தி சென்ற வாலிபர் தற்போது ஊரில் சுதந்திரமாக சுற்றித்திரிகிறான்.

எனது மகள் எங்கே உள்ளாள் என்று தெரியவில்லை. வாலிபரை பிடித்து விசாரித்து எனது மகளை கண்டுபிடித்து தரும்படி பலமுறை போலீஸ் நிலையம் சென்று முறையிட்டேன். ஆனால் போலீசார் என்னை அலட்சியப்படுத்தி அனுப்பி விட்டனர். மகளை கண்டுபிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்து மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றேன் என்றார்.

குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு

இதையடுத்து போலீசார் செல்வியை மனு அளிக்கும்படி மாவட்ட வருவாய் அலுவலரிடம் அழைத்து சென்றனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, காணாமல்போன மகளை கண்டுபிடிப்பதற்கான தொடர் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டிடம் முறையிடும்படி செல்வியை அனுப்பி வைத்தார்.

அதையடுத்து போலீசார் அவரை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்