கணவர் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி குடும்பத்துடன் கர்ப்பிணி தீக்குளிக்க முயற்சி-சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
கணவர் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி குடும்பத்துடன் கர்ப்பிணி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்:
கணவர் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி குடும்பத்துடன் கர்ப்பிணி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளிப்பட்டறை தொழிலாளி
சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் பாபு (வயது 30), வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி சங்கீதா (27). இவர்களுக்கு 2 வயதில் வெண்பா என்ற குழந்தை உள்ளது. தற்போது சங்கீதா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் சங்கீதா தனது குழந்தை மற்றும் மாமியாருடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் திடீரென்று மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டார். தொடர்ந்து மாமியார் மற்றும் குழந்தையின் உடலிலும் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பிற்கு நின்று கொண்டிருந்த போலீசார் அவர்களிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி கொண்டு அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து அப்புறப்படுத்தினர்.
பொய் வழக்கு
இது குறித்து சங்கீதா கூறியதாவது:-
எனது கணவர் பாபுவை கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைபறிப்பு வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். மேலும் எனது தந்தையை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். ஆனால் அவர் தற்போது எங்கு உள்ளார் என்று தெரியவில்லை. போலீசாரிடம் கேட்டால் சரியான பதில் கூறவில்லை. எனவே எனது கணவர் மீது பொய் வழக்கு போடுவதை கைவிடவும், தந்தையை விடுவிக்க வலியுறுத்தியும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து சங்கீதா மற்றும் அவரது குழந்தை, மாமியாரை ஆம்புலன்சில் ஏற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கர்ப்பிணி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.