காதலிக்க மறுத்த சிறுமியை கொல்ல முயற்சி

பொள்ளாச்சி அருகே காதலிக்க மறுத்த சிறுமியை கொல்ல முயன்ற கல்லூரி மாணவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-11-11 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே காதலிக்க மறுத்த சிறுமியை கொல்ல முயன்ற கல்லூரி மாணவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது 19 வயது கல்லூரி மாணவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதை தொடர்ந்து இருவரும் நேரில் சந்தித்தும், செல்போன் மூலம் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

இதற்கிடையில் இருவரும் காதலிப்பது மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், மாணவியை பள்ளியில் இருந்து நிறுத்தினார்கள். மேலும் டுட்டோரியல் சென்டரில் 10-ம் வகுப்பு படிக்க சேர்த்தனர். இதை அறிந்த அந்த மாணவர் சிறுமியை பின் தொடர்ந்து சென்று தன்னை மீண்டும் காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

போக்சோ வழக்கு

இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். அப்போது கல்லூரி மாணவர் வீட்டிற்குள் நுழைந்து என்னை ஏன் காதலிக்க மறுக்கிறாய் என்று கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர், அந்த சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சிறுமி சத்தம் போட்டதால் அந்த மாணவர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் அந்த கல்லூரி மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்