முத்திரையை பயன்படுத்தி கடிதம், கூப்பன் அனுப்பி மோசடி செய்ய முயற்சி
கீரமங்கலம் பகுதியில் ஒருவருக்கு மத்திய அரசின் முத்திரையை பயன்படுத்தி கடிதம் மற்றும் பரிசு கூப்பன் அனுப்பி பணம் பறிக்க மோசடி முயற்சி நடந்துள்ளது.
மத்திய அரசு முத்திரையுடன் கடிதம்
கீரமங்கலம் அருகே கொத்தமங்கலம் மேற்கு பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்பு டிஜிட்டல் இந்தியா கம்யூனிகேசன் ஆன்லைன் மார்க்கெட்டிங் டெல்லி என்ற பெயரில் ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தை வாங்கி பிரித்து பார்த்த போது அதில் மத்திய அரசின் முத்திரை (எம்பளம்) இருந்த லெட்டரில் இணைக்கப்பட்டுள்ள கூப்பனை சுரண்டினால் பரிசு உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
கூப்பனை சுரண்டி பார்த்த போது அதில் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் பரிசு கிடைத்திருப்பதாக காட்டியுள்ளது. மேலும் இந்த தொகையை பெற மத்திய-மாநில அரசுகளுக்கு செலுத்த வேண்டிய வரி ரூ.6 ஆயிரத்து 300-ஐ செலுத்திய உடன் பரிசு தொகை அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
மோசடி
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கஸ்டமர் கேர் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டாலும் உடனே வரி பணத்தை கட்டினால் பரிசு தொகை கிடைக்கும். தாமதம் செய்தால் பரிசு கிடைக்காமல் போகும் என்றும் கூறியுள்ளனர். ஆனால் பணத்தை அனுப்பும் முன்பே அந்த மளிகை கடைக்காரர் இது பற்றி சிலரிடம் கூறிய போது இது புதுவிதமான மோசடி, அதனால் பணம் அனுப்ப வேண்டாம் என்று கூறினர். இதையடுத்து மளிகை கடைக்காரரின் ரூ.6 ஆயிரத்து 300 தப்பியது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து கஸ்டமர் கேரில் செல்போனில் பேசிய ராம்குமார் கூறுகையில், தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்கும் போது அதனை பயன்படுத்தி மோசடிகளும் அதிகரித்துள்ளது. முன்பு திடீரென போன் செய்து உங்கள் ஏ.டி.எம். கார்டு லாக் ஆகப் போகுது. இதனால் உங்களது ரகசிய எண்ணை சொல்லுங்கள் என்று வங்கிலிருந்து பணத்தை மோசடி செய்தது போல, தற்போது மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தையும் அரசு முத்திரையை மோசடிக்காக பயன்படுத்தி மக்களை நம்ப வைத்து பணம் மோசடி செய்து வருகின்றனர். இது போன்ற மோசடி கும்பலை போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.