கருவேல மரங்களை வெட்டி கடத்த முயற்சி; 7 பேர் கைது
மெஞ்ஞானபுரம் அருகே கருவேல மரங்களை வெட்டி கடத்த முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே கருவேல மரங்களை வெட்டி கடத்த முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கருவேல மரங்கள்
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள கடாச்சபுரம் கல்லாநேரி குளத்தில் அரசுக்கு சொந்தமான கருவேல மரங்கள் உள்ளன. இந்த மரங்களை அரசின் உரிய அனுமதி பெறாமல் வெட்டி லாரியில் சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
இதுகுறித்து முதலூர் பஞ்சாயத்து தலைவர் பொன் முருகேசன் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாசானமுத்துவிடம் தகவல் தெரிவித்தார். அவர் மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கடத்த முயற்சி
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, அங்கிருந்தவர்களை பிடித்து விசாரணை ெசய்தனர். அதில் அவர்கள் செட்டிகுளத்தைச் சேர்ந்த அமல்ராஜ் (வயது 30), முத்துகிருஷ்ணன் (33), பொக்லைன் டிரைவர்கள் சதீஷ் (28), சரத்குமார் (21), லாரி டிரைவர்கள் வள்ளியூரைச் சேர்ந்த அலெக்சாண்டர் (30), திசையன்விளையைச் சேர்ந்த வேல்சாமி (61), வேப்பலோடையைப் சேர்ந்த விஜயராஜ் (62) உள்பட 9 பேர் அனுமதியின்றி சுமார் 30 டன் கருவேல மரங்களை வெட்டி லாரிகளில் ஏற்றி கடத்த முயன்றது தெரியவந்தது.
7 பேர் கைது
இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய அமிர்தா மகேந்திரன், திருமணி ஆகியோரை தேடி வருகிறார்கள். மேலும் 2 பொக்லைன் எந்திரம், 3 லாரிகள், 4 மரம் அறுக்கும் எந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.