பா.ஜனதாவினர் முற்றுகையிட முயற்சி

திருச்சி திருவானைக்காவலில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட முயன்றனர். இது தொடர்பாக எச்.ராஜா உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-11 19:26 GMT

திருச்சி திருவானைக்காவலில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட முயன்றனர். இது தொடர்பாக எச்.ராஜா உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

பா.ஜனதா போராட்டம்

சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்லி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், மாநாட்டில் கலந்து கொண்ட இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும் திருவானைக்காவலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜனதாவினர் அறிவித்து இருந்தனர்.

ஆனால், இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதைமீறி பா.ஜனதாவினர் போராட்டம் நடத்துவதற்காக கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா தலைமையில் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் காளீஸ்வரன், ஒண்டிமுத்து, தண்டபாணி, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் முரளி என 100-க்கும் மேற்பட்டோர் திருவானைக்காவலில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை மண்டல இணைஆணையர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

கைது

பின்னர் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது, அங்கு ஏற்கனவே தயாராக இருந்த போலீசார் அவர்களை கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். அதன்பின் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

சனாதனம் பற்றி பேசிய உதயநிதி ஸ்டாலினை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை. அதற்கு பதிலாக என்னை கைது செய்கின்றனர். இதற்கு எல்லாம் மாற்றாக தமிழகத்தில் பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும். அப்போது போலீசாருக்கு காக்கி சீருடை, காவி சீருடையாக மாற்றப்படும்.

ஆணவ கொலைகள்

சனாதனத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை. சுப.வீரபாண்டியன், திருமாவளவன் போன்றவர்கள் பிறந்த பின்னரே ஆணவ கொலைகள் நடந்தது. சனாதனத்திற்கு எதிராக பேசுகிறார்கள். இனபடுகொலை செய்வேன் என்கின்றனர். இதை மாற்றும் வரை பா.ஜனதா ஓயாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்