என்எல்சி நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கவே 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலத்தை கையகப்படுத்த முயற்சிஅன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
என்.எல்.சி. நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கவே 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலத்தை கையகப்படுத்த முயற்சிப்பதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
நெய்வேலி,
கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் 25 ஆயிரம் ஏக்கா் விளைநிலத்தை என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்த முயல்வதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. 2 நாள் விழிப்புணர்வு பிரசார நடைபயணத்தை நேற்று வானதிராயபுரம் கிராமத்தில் தொடங்கினார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
நெய்வேலி பகுதியில் 49 கிராமங்களில் இருந்து 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் கையகப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதுபற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தான் 2 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறேன்.
என்.எல்.சி. நிர்வாகம் 66 ஆண்டுகளுக்கு முன்பு நம் மக்களிடம் 37 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்தி எடுத்துக் கொண்டது. இதுவரை யாருக்கும் பட்டா வழங்கவில்லை. வேலைவாய்ப்பும் வழங்கவில்லை.
ஆரம்ப காலத்தில் ஏதோ 1800 பேருக்கு வேலை வழங்கியது. அவர்களும் தற்போது பணி ஓய்வு பெற்று விட்டனர். நான் இங்கு தேர்தல் பிரசாரத்திற்காக வரவில்லை. உங்களிடம் ஓட்டு கேட்கவில்லை. இந்த மண்ணின் மக்களுக்காக, குடிநீருக்காக, விவசாயத்தை காப்பதற்காக வந்திருக்கிறேன்.
நிலங்களை பறிக்க முயற்சி
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே 10 அடியில் தண்ணீர் கிடைத்தது. ஆனால் தற்போது 1000 அடிக்கு கீழே தான் தண்ணீர் உள்ளது. ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறார்கள்.
என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலத்தை பிடுங்கி கொடுக்க 2 அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உடந்தையாக செயல்பட்டு வருகிறார்கள். விவசாயத்தை பாதுகாக்கக்கூடிய அமைச்சர் அதற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவர் மக்களை பற்றி கவலைப்படாமல் என்.எல்.சி.க்கு நிலத்தை பிடுங்கி கொடுக்க துடிக்கிறார்.
2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்க போகிறார்கள். இதை மத்திய அரசே நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறது. என்.எல்.சி. நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைப்பதற்காக தான் இந்த 25 ஆயிரம் ஏக்கா் நிலங்களை பறிக்க முயற்சி செய்கிறார்கள். ஏற்கனவே 1987-ம் ஆண்டு கையகப்படுத்திய 10 ஆயிரம் ஏக்கர் நிலம் அப்படியே உள்ளது. இதில் இருந்து இன்னும் 40 ஆண்டுகளுக்கு நிலக்கரி எடுக்க முடியும். அதை விட்டுவிட்டு தற்போது 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முயற்சி செய்கிறார்கள். இந்த நிலத்தை கட்டுப்படுத்தி பிரபலமான தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க முயற்சி நடக்கிறது. இதனால் இப்போது ஏக்கருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தருவதாகவும், 500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாகவும் மாவட்ட நிர்வாகமும், அமைச்சரும் கூறி வருகிறார்கள். 2 ஆண்டுகளுக்கு பிறகு தனியாரிடம் ஒப்படைக்க போகும் என்.எல்.சி. நிர்வாகத்திடம் இருந்து எப்படி வேலைவாய்ப்பை கொடுக்க முடியும்.
ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினை
என்.எல்.சி.க்கு நிலத்தை கொடுக்காவிட்டால் தமிழகம் இருண்டு விடும் என்று ஏமாற்றி வருகிறார்கள். தமிழகத்திற்கு ஒட்டுமொத்தமாக 18 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் என்.எல்.சி. நிர்வாகம் 2000 மெகாவாட் மின்சாரத்தை தான் உற்பத்தி செய்கிறது. அதிலிருந்து நமக்கு 40 சதவீதமாக 800 மெகாவாட் மின்சாரம் தான் தருகிறது. இப்படி இருக்கும்போது எப்படி தமிழகம் இருண்டதாக மாறும். இது 49 கிராமங்களின் பிரச்சினைகள் மட்டும் கிடையாது. ஒட்டுமொத்த கடலூர் மாவட்ட மக்களின் பிரச்சினை.
என்.எல்.சி. நிர்வாகத்திற்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அதில் ஆண்டுக்கு 2400 கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது. 66 ஆண்டுகளாக என்.எல்.சி. நிர்வாகம் மக்களை ஏமாற்றி வருகிறது. இனியும் மக்கள் ஏமாற மாட்டார்கள். இங்குள்ள அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம், தமிழக முதல்-அமைச்சர், மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஆகியோர் இந்த என்.எல்.சி. நிர்வாகத்தை தனியாருக்கு விற்பனை செய்ய மாட்டோம் என்று எழுதிக் கொடுக்க முடியுமா?
தமிழக அரசு எதற்கெடுத்தாலும் மத்திய அரசை எதிர்த்து வருகிறது. மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து வருகிறது. என்.எல்.சி.யும் மத்திய அரசு நிறுவனம் தான். ஆனால் இதற்கு மட்டும் மத்திய அரசுக்கு உடந்தையாக செயல்படுவது ஏன்?. தனியார் நிறுவனம் என்.எல்.சி.யை எடுத்த பிறகு நிலத்தை கையகப்படுத்த முடியாது.
பா.ம.க. மட்டும் போராடுகிறது
பரங்கிப்பேட்டைக்கு சைமா தொழிற்சாலை வர போகிறது. அதையும் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் உணர்வுபூர்வமாக போராட்டம் நடத்துகிறோம். கோவை மாவட்டம் அன்னூரில் தொழில் பூங்கா தொடங்க 3,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்த போகிறார்கள். அதில் 2000 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது. 1500 ஏக்கர் தனியார் நிலம் என்று சொல்கிறார்கள். அந்த தனியார் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தக்கூடாது என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் போராட்டம் நடத்துகின்றனர். மற்ற கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் கடலூர் மாவட்டத்தில் இப்பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை எடுக்கக் கூடாது என்று யாராவது குரல் கொடுத்தார்களா?. ஓட்டுக்கு மட்டும் வருவார்கள். மக்கள் பிரச்சினைக்காக வர மாட்டார்கள். பா.ம.க. மட்டும் போராடுகிறது.
வெளிமாநிலங்களில் முதலீடு
என்.எல்.சி. நிர்வாகம் இங்குள்ள லாபத்தை கொண்டு ரூ.55 ஆயிரம் கோடியை ஒடிசா, உத்தரபிரதேசம், ஜார்கண்ட், பீகார், ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் முதலீடு செய்கிறது. ஆனால் நாம் அவர்களிடம் வேலை கொடு, வேலை கொடு என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.
ஆகவே தமிழகத்துக்கு என்.எல்.சி. நிர்வாகம் வேண்டாம். வெளியேற வேண்டும். நிலம் எடுக்கும் முடிவை கைவிட வேண்டும். ராணுவமே வந்தாலும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இந்த போராட்டத்திற்கு ஒட்டுமொத்த மக்களும் ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.
அதையடுத்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் யாரோ, என்.எல்.சி. பிரச்சினை குறித்து நான் நாடாளுமன்றத்தில் பேசவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளதாக கேட்கிறீர்கள். இது பற்றி நான் நாடாளுமன்றத்தில் 15 முறைக்கு மேல் பேசி இருக்கிறேன். இது பற்றி அனைவருக்கும் தெரியும். அவருக்கு தெரியவில்லை என்றார்.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் என்ஜினீயர் ரவிச்சந்திரன் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன், தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ.மகேஷ், மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வக்கீல் பாலு, மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி, மாநில கொள்கை விளக்க அணி தலைவர் செல்வகுமார், மாநில அமைப்பு தலைவர் பழ.தாமரைக்கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் முத்து.வைத்திலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேங்கை சேகர், பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் திலகர், பாட்டாளி தொழிற்சங்க தலைவர் செல்வராஜ், மாநில மாணவர் சங்க தலைவர் கோபிநாத், முன்னாள் மாவட்ட செயலாளர் வடக்குத்து ஜெகன், மாவட்ட தலைவர்கள் தேவதாஸ் படையாண்டவர், தடா.தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து வானதிராயபுரம், தென்குத்து, வடலூர், மந்தாரக்குப்பம், வடக்கு வெள்ளூர், அம்மேரி, தொப்பிளிகுப்பம், வழியாக வந்து ஆதண்டார்கொல்லையில் தனது முதல்நாள் நடைபயணத்தை அவர் முடித்துக்கொண்டார். முன்னதாக அங்கு அமைக்கப்பட்டு இருந்த திறந்தவெளி மேடையில் மக்கள் மத்தியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.பேசினார்.
இன்று...
தொடர்ந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) தனது 2-வது நாள் நடைபயணத்தை வளையமாதேவியில் இருந்து தொடங்கி கரிவெட்டி கிராமத்தில் நிறைவு செய்ய இருக்கிறார்.