பெண்ணை கத்தியால் தாக்கி நகை பறிக்க முயற்சி-கணினி ஷோரூம் உரிமையாளர் கைது

திசையன்விளையில் பெண்ணை கத்தியால் தாக்கி நகை பறிக்க முயன்ற கணினி ஷோரூம் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-13 20:16 GMT

திசையன்விளை:

திசையன்விளையில் பெண்ணை கத்தியால் தாக்கி நகை பறிக்க முயன்ற கணினி ஷோரூம் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கோலம் போட்ட பெண்

திசையன்விளை மனகாவலபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மனைவி செல்வி (வயது 35). இவர் நேற்று அதிகாலையில் தனது வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த மர்மநபர் திடீரென்று செல்வியின் கழுத்தில் கத்தியை வைத்து, அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை கழற்றி தருமாறு மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி தனது நகையை கைகளால் இறுக பிடித்துக்கொண்டு 'திருடன் திருடன்' என்று கூச்சலிட்டார். உடனே மர்மநபர் செல்வியிடம் நகையை பறிக்க முயன்றார். அப்போது அவர் கத்தியால் தாக்கியதில், செல்வியின் கழுத்திலும், கைவிரலிலும் ரத்தக்காயம் ஏற்பட்டது.

கணினி ஷோரூம் உரிமையாளர் கைது

இதற்கிடையே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்ததால், மர்மநபர் தப்பி ஓடினார். எனினும் பொதுமக்கள் விரட்டிச் சென்று அவரை மடக்கி பிடித்து, திசையன்விளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர் திசையன்விளை அருகே விஜய அச்சம்பாட்டைச் சேர்ந்த பட்டதாரியான சத்யமூர்த்தி (40) என்பதும், இவர் திசையன்விளை பஸ் நிலையம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் கணினி விற்பனை மற்றும் பழுது பார்க்கும் ஷோரூம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து, சத்யமூர்த்தியை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்