தகராறை தட்டிக்கேட்ட வாலிபர் மீது தாக்குதல்
தகராறை தட்டிக்கேட்ட வாலிபர் தாக்கப்பட்டார்.
குடியாத்தம் புதுப்பேட்டை என்.கே.சி.செட்டி தெருவை சேர்ந்தவர் எம்.எஸ்.குகன். தி.மு.க. பிரமுகரான இவர் குடியாத்தம் நகராட்சி 17- வது வார்டு உறுப்பினராக உள்ளார். இவரது மனைவி காயத்ரி (வயது 29). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு வெளியே கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது கூச்சலிட்டபடியே நான்கு வாலிபர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து உள்ளனர். அவர்கள் காயத்ரியை பார்த்து ஆபாசமாக பேசி உள்ளனர்.
இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் கையில் வைத்திருந்த இரும்பு தடியால் சரத்குமார் (25) என்பவரின் தலைமீது சரமாரியாக தாக்கி உள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரத்குமார் சாய்ந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு 4 பேரும் தப்பி ஓடி விட்டனர். பலத்த காயமடைந்த சரத்குமார் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் காயத்ரி அளித்த புகாரின் பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகள் வழக்கு பதிவு செய்து அந்த கும்பலை தேடி வருகின்றனர். மேலும் கும்பல் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.