சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல்: அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் 155 பேர் கைது

தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் 155 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-23 20:40 GMT

தூத்துக்குடி,

பா.ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவராக இருப்பவர் சசிகலா புஷ்பா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி மேயராகவும், எம்.பி.யாகவும் இருந்து உள்ளார். நேற்று முன்தினம் தூத்துக்குடியில் உள்ள இவரது வீட்டுக்கு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மநபர்கள் 13 பேர் திடீரென வீட்டின் வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

மேலும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், பூந்தொட்டிகள், நாற்காலிகளை சேதப்படுத்தினர். இதைத்தொடர்ந்து பா.ஜனதாவினர் திரண்டு வந்து போராட்டம் நடத்த முயன்றனர். மேலும் வீட்டை தாக்கி சேதப்படுத்தியவர்களை கைது செய்யாவிட்டால் அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவோம் என்று அறிவித்தனர்.

முற்றுகையிட முயற்சி

இதனால் நேற்று காலையில் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தக்கூடும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடியில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

குறிஞ்சிநகரில் உள்ள பா.ஜனதா தெற்கு மாவட்ட அலுவலகத்தில் திரண்டிருந்த பா.ஜனதாவினர் அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவதற்காக புறப்பட்டனர். அவர்கள் எட்டயபுரம் ரோடு கலைஞர் அரங்கம் அருகே வந்தபோது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி உள்ளிட்ட 77 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிரடிப்படை வீரர்கள்

அதே நேரத்தில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் உமரிசத்தியசீலன் உள்ளிட்ட சிலர் போலீஸ் தடுப்புகளை தாண்டி எட்டயபுரம் ரோடு வழியாக போல்பேட்டையில் உள்ள அமைச்சர் வீட்டை நோக்கி முன்னேறினர். இதனால் போலீசார் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர். போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் அதிரடிப்படை வீரர்களுடன் விரைந்து சென்று போல்பேட்டை பகுதியில் வைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

155 பேர் கைது

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 78 பேரை போலீசார் கைது செய்து தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இரு இடங்களிலும் சேர்த்து மொத்தம் 155 பேர் கைது செய்யப்பட்டனர்.

தி.மு.க. கவுன்சிலர்கள் மீது வழக்கு

சசிகலா புஷ்பா வீடு, கார் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா பிரசார பிரிவு செயலாளர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராமகிருஷ்ணன், இசக்கிராஜா உள்பட 3 தி.மு.க. கவுன்சிலர்கள், ரவீந்திரன் உள்ளிட்ட 13 பேர் மீது அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து சேதப்படுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் கவுன்சிலர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அமைச்சர் கீதாஜீவனுக்கு மிரட்டல்; சசிகலா புஷ்பா மீது வழக்கு

கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடந்த 21-ந்தேதி தூத்துக்குடியில் நடந்தது. விழாவில் பா.ஜனதா மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை மிரட்டும் வகையிலும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன் தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சசிகலா புஷ்பா மீது 504 (அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு செய்தல்), 505 (2) (தேவையற்ற கருத்துகளை பேசி பீதியை ஏற்படுத்துதல்), 506 (1) (கொலை மிரட்டல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்