குற்றாலம் அருவிக்கரையில் போலீஸ்காரர் மீது தாக்குதல்- 4 சுற்றுலா பயணிகள் கைது

பழைய குற்றாலம் அருவிக்கரையில் போலீஸ்காரரை தாக்கியதாக சுற்றுலா பயணிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-19 18:45 GMT

பழைய குற்றாலம் அருவிக்கரையில் போலீஸ்காரரை தாக்கியதாக சுற்றுலா பயணிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடிபோதையில் தகராறு

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த ஆண்டுக்கான சீசன் காலம் முடிவடைந்து விட்டது. இருப்பினும் அருவிகளில் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் பலர் தினமும் குற்றாலத்திற்கு வந்து அருவிகளில் ஆனந்தமாக குளித்து விட்டு செல்கிறார்கள். நேற்று முன்தினம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில் பழைய குற்றாலம் அருவிக்கரையில் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் செய்யது மசூது (வயது 30) என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிலர் குடிபோதையில் தகராறு செய்வதாக, சுற்றுலா பயணிகள் அவரிடம் கூறினர். உடனே செய்யது மசூது அங்கு சென்று அவர்களிடம் பொது இடத்தில் தகராறு செய்யக்கூடாது என்று எச்சரித்தார்.

4 பேர் கைது

உடனே அங்கு தகராறு செய்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் விருதுநகர் மாவட்டம் வடமலாபுரத்தைச் சேர்ந்த சரவணன் (43), சுப்பிரமணியன் (27), நாரணபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (26), திருமங்கலம் அருகே உள்ள கள்ளிகுடியைச் சேர்ந்த முருகேசன் (49) ஆகியோர் செய்யது மசூதுவை கண்டபடி திட்டிக் கொண்டு நாங்கள் அப்படித் தான் செய்வோம், உன்னால் என்ன செய்ய முடியும்? என்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் சத்தம் போடவே அருகில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து 4 பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து குற்றாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் தாமஸ், 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்