காரில் மது விற்றதை தடுத்த போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்

குளச்சல் அருகே காரில் மது விற்றதை தடுக்க சென்ற போலீஸ் ஏட்டை தாக்கிய முன்னாள் ராணுவ வீரரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-05-02 18:45 GMT

குளச்சல்:

குளச்சல் அருகே காரில் மது விற்றதை தடுக்க சென்ற போலீஸ் ஏட்டை தாக்கிய முன்னாள் ராணுவ வீரரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மது விற்பனை

குளச்சல் அருகே உள்ள மேற்கு நெய்யூர் விநாயகர் நகர் பகுதியில் காரில் வைத்து திருட்டுத்தனமாக மது விற்பனை நடப்பதாக குளச்சல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏட்டு ரத்தினேஸ்வரன் (வயது 40) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு காரை சோதனை செய்ய முயன்றனர். ஆனால் காரில் இருந்த பெத்தேல்புரத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுரேந்திகுமார் சோதனை செய்ய விடாமல் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ஆனால் போலீசார் மது விற்பனையை தடுக்கும் வகையில் காரை சோதனையிட முயன்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த சுரேந்திரகுமார் ஏட்டு ரத்தினேஸ்வரனை கையால் முகத்தில் தாக்கி, காலால் உதைத்தார்.

கொலை மிரட்டல்

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவரை அருகில் நின்ற போலீசார் தூக்கி நிறுத்தினர். உடனே, சுரேந்திரகுமார் காரில் வைத்திருந்த வெட்டுகத்தியை எடுத்து காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடினார்.

ெதாடர்ந்து போலீசார் காரை சோதனை செய்த போது 10-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் காருடன் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக சுரேந்திரகுமார் மீது வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். மேலும் தாக்குதலில் படுகாயமடைந்த போலீஸ் ஏட்டு ரத்தினேஸ்வரன் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்