விருத்தாசலத்தில் பரபரப்புபெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல்3 வாலிபர்கள் சிக்கினர்
விருத்தாசலத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் தோட்டக் கலைத்துறை பண்ணை அருகில் பெட்ரோல் பங்க் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த பங்கில் விருதகிரிகுப்பத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் ஜெயராஜ் (வயது 39) என்பவர் பணியில் இருந்தார்.
அப்போது விருத்தாசலம் திரு.வி.க. நகரை சேர்ந்த அப்துல் அஜித் மகன் அப்துல் ஹமீது (24), மோகன் மகன் வசந்த் (21), அமிருதீன் மகன் சித்திக் அலி (24) ஆகிய 3 பேரும் புத்தாண்டை கொண்டாடிவிட்டு, ஒரு மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பங்கிற்கு வந்தனர்.
அங்கு 50 ரூபாய்க்கு பெட்ரோல் கேட்டனர். உடனே ஊழியரான ஜெயராஜியும் பெட்ரோல் போட்டார். அதற்கான பணத்தை அவர்கள், ஆன்லைன் மூலமாக செலுத்தியுள்ளனர். ஆனால் அந்த பணம் ஏறவில்லை. இதுபற்றி அறிந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஜெயராஜ், அவர்களிடம் பணம் வராதது குறித்து கேட்டார்.
3 வாலிபர்கள் கைது
இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் ஜெயராஜ் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்களை அசிங்கமாக திட்டி தாக்கியுள்ளனர். மேலும், அங்கிருந்த அலுவலகத்துக்குள் புகுந்தும், ஊழியர்களை தாக்கினர்.
இந்த தாக்குதல் தொடர்பான சம்பவம், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் ஹமீது, வசந்த், சித்திக்அலி ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.