கரூரில் வருமானவரி அதிகாரிகள் மீது தாக்குதல்:ஜாமீன், முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கில் பதில் அளிக்க அவகாசம்

கரூரில் வருமானவரி அதிகாரிகள் மீது தாக்கிய சம்பவத்தில் ஜாமீன், முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கில் பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது.

Update: 2023-07-17 21:24 GMT


வருமான வரித்துறையின் உதவி இயக்குனர் யோக பிரியங்கா மற்றும் அதிகாரிகள் சிலர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கரூரை சேர்ந்த சிலர் வருமான வரி முறைகேடு செய்ததாக புகார்கள் வந்தன. அதன்பேரில் அவர்களின் வீடுகளில் கடந்த மே மாதம் 25-ந்தேதி சோதனை நடத்தினோம். அங்கு கூடிய கூட்டத்தினர் எங்களை தாக்கினர். மேலும் எங்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர். திடீரென கூட்டம் அதிகரித்தது. இதனால் நாங்கள் எங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அங்கிருந்து வெளியேறினோம்.

இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்கி கரூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியவர்கள் மீதான வழக்கில் ஜாமீன், முன்ஜாமீன் அளித்தது ஏற்புடையதல்ல. எனவே அதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் போலீசார் தரப்பிலும், ஜாமீன், முன்ஜாமீன் பெற்ற 19 பேர் சார்பிலும் உரிய பதில் அளிக்கும்படி ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பிலும் இந்த வழக்கில் உரிய பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்