சேலத்தில் அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்-3 வாலிபர்கள் கைது

சேலத்தில் அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-16 21:26 GMT

டிரைவர் மீது தாக்குதல்

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 44). அரசு பஸ் டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு தர்மபுரியில் இருந்து சேலத்துக்கு பஸ்சை ஓட்டி வந்தார். சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு எரிபொருள் நிரப்புவதற்காக மெய்யனூர் பணிமனைக்கு பஸ்சை ஓட்டி சென்றார்.

அதன்பிறகு அவர் மீண்டும் தர்மபுரிக்கு பயணிகளை ஏற்றி செல்வதற்காக புதிய பஸ் நிலையத்துக்கு பஸ்சை ஓட்டி வந்தார். நுழைவு வாயில் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பஸ்சுக்கு முன்னால் சென்று தடுமாறி கீழே விழுந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் டிரைவர் அசோக்குமாரை திட்டியதுடன் அவரை கடுமையாக தாக்கினர்.

3 பேர் கைது

இதில் காயம் அடைந்த டிரைவர் அசோக்குமார் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் டிரைவர் அசோக்குமாரை தாக்கியது சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த ஜெயசூர்யா (24), பட்டைக்கோவில் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (26) மற்றும் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கிஷோர்குமார் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்