தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளர் மீது தாக்குதல்
நடத்தையில் சந்தேகப்பட்டு கூலிப்படையை ஏவி தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளரை தாக்கிய அவரது மனைவி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தன
பொள்ளாச்சி
நடத்தையில் சந்தேகப்பட்டு கூலிப்படையை ஏவி தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளரை தாக்கிய அவரது மனைவி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தாக்குதலில் படுகாயம்
பொள்ளாச்சி அருகே கோட்டூர் மலையாண்டிபட்டிணத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 36). உடுமலை ரோடு துறையூர் மேட்டில் தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது மனைவி சண்முகபிரியா (34). ரேஷன் கடையில் வேலை பார்க்கிறார்.
இந்த நிலையில் மணிகண்டன் கடந்த 9-ந் தேதி தென்னை நார் தொழிற்சாலையில் இருந்தார். அப்போது நாய் குரைக்கும் சத்தம் கேட்டு கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அதில், தொழிற்சாலைக்கு வெளியே 8 பேர் நிற்பது தெரியவந்தது. உடனே அங்கு மணிகண்டன் தனது டிரைவர் கார்த்திக்குடன் சென்று, அவர்களிடம் விசாரித்தனர். அப்போது திடீரென அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், மணிகண்டனை தாக்கி விட்டு தப்பியது. இதில் படுகாயமடைந்த அவர், பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ரூ.3 லட்சம் பேரம்
இதுகுறித்து ஆழியாறு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சண்முகபிரியா தனது கணவரான மணிகண்டனின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கூலிப்படையை ஏவி தாக்கியது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக கிருஷ்ணமூர்த்தி என்பவரது மனைவி மாரியம்மாள் இருந்ததும், மதுரையை சேர்ந்த கூலிப்படையிடம் மணிகண்டனை கொலை செய்யாமல் அடித்து காயப்படுத்த வேண்டும், அதற்கு ரூ.3 லட்சம் பேரம் பேசி அழைத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சண்முகபிரியா, மாரியம்மாள் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 6 பேர் என 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.