பா.ஜனதா பிரமுகர் மீது தாக்குதல்
சங்கரன்கோவிலில் பா.ஜனதா பிரமுகர் தாக்கப்பட்டார்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மேல செக்கடி தெருவை சேர்ந்தவர் பூதத்தான் மகன் சுப்பிரமணியன். இவர் நகர பா.ஜனதா வர்த்தக அணி துணைத்தலைவராக உள்ளார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர் நகர மகளிர் அணி தலைவியாக இருக்கிறார். சுப்பிரமணியன் வீட்டின் அருகே குப்பை கொட்டப்பட்ட தகராறில் அருகில் இருந்தவர்கள் அவரை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த சுப்பிரமணியன் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பணியில் இருந்தவர்கள் அவரை ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்க்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அவர் தரையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் நகர பா.ஜனதா தலைவர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் விக்னேஷ், அந்தோணி ராஜ், சங்கர் உள்ளிட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள், சுப்பிரமணியனை உள்நோயாளியாக சேர்க்க மறுத்தால் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று கூறினர். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, பா.ஜனதா பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.