தாய்-மகன்,மகள் உள்பட 4 பேர் மீது தாக்குதல்

கூத்தாநல்லூர் அருகே தாய்-மகன்,மகள் உள்பட 4 பேர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி ஒரு தரப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-01-22 18:45 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே தாய்-மகன்,மகள் உள்பட 4 பேர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி ஒரு தரப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வாக்குவாதம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள திருமாஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவருடைய மகன் வினோத் (வயது 24). இவர் கடந்த 16-ந் தேதி மூலங்குடியில் உள்ள தனது நண்பர் சஞ்சய் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது மூலங்குடியில், சாலையில் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (49) என்பவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தக்கூடாதா என்று வினோத், கோவிந்தராஜிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

4 பேர் மீது தாக்குதல்

இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி புனிதா, அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபால் மற்றும் 18 வயது சிறுவன் உள்பட 5 பேரும் சேர்ந்து வினோத், அவரது நண்பர் சஞ்சய், சஞ்சய் தாய் ராஜலட்சுமி, தங்கை ஆகிய 4 பேரையும் தாக்கினர். இந்த தாக்குதலில் 4 பேரும் காயமடைந்தனர்.

இதுகுறித்து வினோத் கொடுத்த புகாரின் பேரில் கூத்தாநல்லூர் போலீசார், கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி புனிதா (40), மூலங்குடி பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (63), 18 வயது சிறுவன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல தங்களை தாக்கியதாக கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் வினோத், சஞ்சய், ராஜலட்சுமி உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல்

இந்த நிலையில், தாக்குதல் நடத்திய கோவிந்தராஜ் தரப்பினரை போலீசார் கைது செய்யாததை கண்டித்து வினோத் தரப்பை சேர்ந்தவர்கள் நேற்று கூத்தாநல்லூர் அருகே உள்ள, மூலங்குடி என்ற இடத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

82 பேர் மீது வழக்குப்பதிவு

மேலும், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக 82-க்கும் மேற்பட்டோர் மீது கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சாலை மறியலால் திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்