பாஜக நிர்வாகிகள் வீடுகளில் தொடரும் தாக்குதல்; அடுத்தடுத்து சம்பவங்கள்...!

தாம்பரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

Update: 2022-09-24 04:26 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பாஜக மற்றும் இந்து மத அமைப்புகளின் நிர்வாகிகள், தொடர்புடைய இடங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன் தினம் இரவு கோவையில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாநிலத்தின் பல பகுதிகளில் பாஜக மற்றும் இந்து மத அமைப்புகளின் நிர்வாகிகளின் வீடுகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் குடைப்பாறைபட்டியை சேர்ந்தவர் செந்தில் பால்ராஜ். இவர் பாஜக கிழக்கு மாவட்ட மேற்கு மண்டலத்தின் மாநகர் தலைவராக உள்ளார். இவர் ஆட்டோ 'கன்சல்டிங்' தொழில் செய்து வருகிறார்.

திண்டுக்கல் - வத்தலகுண்டு சாலையில் செந்தில் பால்ராஜிக்கு சொந்தமாக இடம் உள்ளது. அந்த இடத்தில் கூடாரம் அமைத்து தனது பைக்குகள், கார்களை நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில், அந்த பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் செந்தில் பால்ராஜின் கூடாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், பைக்குகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த செந்தில் பால்ராஜ் தீயணைப்புதுறையினருக்கு தகவல் கொடுத்தார்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனெனினும், இந்த சம்பவத்தில் 1 கார், 5 பைக்குகள் தீக்கிரையாகின. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த பாஜக நிர்வாகி சிவசேகர். இவரது வீடு புஞ்சை புளியம்பட்டி எஸ்.ஆர்.டி. நகர் பகுதியில் உள்ளது.

பாஜக நிர்வாகியான இவர் புஞ்சை புளியம்பட்டியின் முன்னாள் நகர பொருளாளராக இருந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான 3 வாகனங்களை வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான கார்களை தனது வீட்டிற்கு முன் நிறுத்துவது வழக்கம்.

இதனிடையே, நேற்று இரவு காரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு வீட்டிற்கு உறங்க சென்றுவிட்டார். அப்போது, இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த கார்கள் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதை கண்ட சிவசங்கர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் கார் முழுவதும் சேதமடைந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கார்களுக்கு தீ வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், கோவை மாவட்டம் கோவைபுதூரில் வசித்துவரும் அனந்தகல்யான கிருஷ்ணன் இந்துமத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். - இன் துணை அமைப்பான சமஸ்கிருத பாரதியின் தமிழ்நாடு-கேரள பொறுப்பாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணியளவில் பைக்கில் வந்த சிலர் அனந்தகல்யானின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச்சென்றனர். சத்தம் கேட்டு வெளியே வந்த அவரின் குடும்பத்தினர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தாம்பரம் அருகே உள்ள சிட்லபாக்கம் ராஜராஜேஸ்வரில் நகரில் இந்து மத அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் சீதாராமன் வீடு உள்ளது. அவரது வீட்டில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பைக்கில் வந்த 2 பேர் சீதாராமன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்