பாப்பாரப்பட்டி அருகே கோவிலில் பொங்கல் வைப்பதில் இரு சமூகத்தினரிடையே தகராறு-போலீசார் குவிப்பு
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே பனைக்குளம் காட்டமராஜா கோவிலில் பொங்கல் வைப்பதில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காட்டமராஜா கோவில்
பாப்பாரப்பட்டி அருகே உள்ளது பனைக்குளம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள காட்டமராஜா கோவிலில் இரு சமூகத்தினர் வழிபட்டு வருகிறார்கள். மேலும் காணும் பொங்கல் அன்று, இரு சமூகத்தினரும் ஒன்றிணைந்து கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம்.
இந்தநிலையில் காணும் பொங்கலான நேற்று ஒரு சமூகத்தினர் கோவிலுக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கோவிலில் பொங்கல் வைத்து, படையலிட்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது அங்கு வந்த மற்றொரு சமூகத்தினர், நாங்கள் வருவதற்கு முன்பே எப்படி பொங்கலிட்டு வழிபாடு நடத்தலாம்? என்று கேட்டனர். இதனால் இரு சமூகத்தினருகும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது.
போலீசார் குவிப்பு
மேலும் இரு சமூகத்தை சேர்ந்தவர்களும் கோவில் வளாகத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜெயக்குமார் தலைமையில் பாப்பாரப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் இரு சமூகத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போலீசார் பொங்கல் விழாவை நிறுத்தினர். மேலும் இன்று (புதன்கிழமை) தர்மபுரி துணை கலெக்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அதுவரை கோவிலில் பொங்கல் வைக்ககூடாது என்றும் கூறி அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து இரு சமூகத்தினரும் கலைந்து சென்றனர்.
இதனிடையே பனைக்குளம் கிராமத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.