தேவதானப்பட்டி அருகே மாமனாரை தாக்கிய மருமகனுக்கு வலைவீச்சு

தேவதானப்பட்டி அருகே மாமனாரை தாக்கிய மருமகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-12-07 17:06 GMT

தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த தனுஷ் (62) என்பவரது மகளுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டனின் மனைவி, அவரை விட்டு பிரிந்து சென்று தனது தந்தை வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார். இதனால் தனுசுக்கும், மணிகண்டனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று எருமலைநாயக்கன்பட்டியில் உள்ள டீக்கடையில் தனுஷ் இருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன், தனது மாமனாருடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் தனுசை அவர் தாக்கியதுடன், அவரது கட்டை விரலை கடித்து காயப்படுத்திவிட்டு தப்பிவிட்டார். இதில் காயம் அடைந்த தனுஷ் சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் மணிகண்டன் மீது ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்