ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏ.டி.எம். மைய கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏ.டி.எம். மைய கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஏ.டி.எம். கொள்ளை
கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் கியாஸ் கட்டிங் எந்திரத்தை பயன்படுத்தி வட மாநில கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.72 லட்சத்து 79 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.
இதுகுறித்து 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதும், இவர்கள் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் தங்கியிருந்து குற்றம் நடந்த பகுதிகளை ஏற்கனவே நோட்டமிட்டு அதன் பின்பு கொள்ளையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
9 பேர் கைது
தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் இவ்வழக்கில் 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் இந்த கொள்ளை சம்பவத்தில் அரியானா மாநிலம் நூ மேவாத் மாவட்டம் பாதஸ் கிராமத்தை சேர்ந்த ஆசீப்ஜாவேத் (வயது 30) என்பவர் மூளையாக செயல்பட்டு நேரடியாக கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஆவார்.
இவர் தொடர்ந்து சட்ட விரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் கலெக்டர் உத்தரவின் பேரில் ஆசீப்ஜாவேத் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.