ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.40 ஆயிரம் அபேஸ்; கோவையை சேர்ந்த பெண் கைது
கடையநல்லூரில் ஏ.டி.எம். கார்டை திருடி அதன்மூலம் ரூ.40 ஆயிரம் அபேஸ் செய்ததாக, கோவையை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் ஏ.டி.எம். கார்டை திருடி அதன்மூலம் ரூ.40 ஆயிரம் அபேஸ் செய்ததாக, கோவையை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஏ.டி.எம். கார்டு திருட்டு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேஸ்வரி (வயது 33). இவர் சம்பவத்தன்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடையநல்லூருக்கு அரசு பஸ்சில் சென்றார். பின்னர் அங்கு பொருட்கள் வாங்கிவிட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி பஸ்நிறுத்தத்தில் இருந்து பஸ்சில் ஏறி வீட்டுக்கு வந்தார்.
பையை திறந்து பார்த்தபோது மணிபர்சை காணவில்லை. யாரோ மர்மநபர் மணிபர்சை திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது. மணிபர்சில் ரூ.1,000, ஏ.டி.எம். காா்டு மற்றும் அதற்கான ரகசிய குறியீட்டு எண்ணும் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
பணம் அபேஸ்
பின்னர் சிறிது நேரத்தில் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விசாரித்ததில், கடையநல்லூரில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுத்தது தெரியவந்தது.
பின்னர் இதுபற்றி கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார், பணம் எடுக்கப்பட்ட கடையநல்லூர் தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.
போலீசார் விசாரணை
அதில் முருகேஸ்வரியின் ஏ.டி.எம். கார்டு மூலம் பணத்தை திருடிய பெண்ணின் உருவம் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த பெண்ணின் உருவப்படத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கோவை தெற்கு மதுக்கரை அண்ணா சதுக்கம் அறிவியல் நகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மனைவி பழனியம்மாள் (55) என்பவர் முருகேஸ்வரியின் ஏ.டி.எம். கார்டை திருடி அதன்மூலம் ரூ.40 ஆயிரம் எடுத்ததும், அவர் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
பெண் கைது
இதையடுத்து போலீசார் கோவைக்கு விரைந்து சென்றனர். அங்கு வீட்டில் இருந்த பழனியம்மாளை கைது செய்து கடையநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.