ஏ.டி.எம். மையங்களில் இரவு காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்
செய்யாறில் உள்ள அனைத்து ஏ.டி.எம். மையங்களில் இரவு காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் கூறினார்.
தூசி
செய்யாறில் உள்ள அனைத்து ஏ.டி.எம். மையங்களில் இரவு காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் கூறினார்.
விழிப்புணர்வு கூட்டம்
செய்யாறு காவல் கோட்டத்தில் உள்ள அனைத்து வங்கி அலுவலர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் செய்யாறில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இன்ஸ்பெக்டர் பாலு முன்னிலை வகித்தார்.
செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் இரவு நேரங்களில் கண்டிப்பாக இரவு காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். இதில் வயதானவர்களை தவிர்க்க வேண்டும்.
கண்காணிப்பு கேமரா
வங்கி ஏ.டி.எம். மையங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். ேமலும் கண்காணிப்பு கேமராக்கள் நல்ல நிலையில் செயல்படுகிறதா என அடிக்கடி சரி பார்க்க வேண்டும்.
ஏ.டி.எம். மையங்களை நோக்கியபடி எதிரே வெளியில் இருந்து கண்காணிக்கும்படி கேமராக்கள் பொருத்த வேண்டும்.
வங்கிக்கு அடிக்கடி வரும் நபர்கள் சந்தேகப்படும் படியாக தெரிந்தால் அந்த நபரை புகைப்படம் எடுத்து உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும் நீண்ட நேரம் வங்கிக்குள் அமர்ந்து இருப்பவர்களை கண்காணித்து அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். வங்கியில் எச்சரிக்கை அலாரம் கண்டிப்பாக பொருத்தப்படவேண்டும்.
ஏ.டி.எம். மையம் மற்றும் வங்கிக்குள் செக்யூரிட்டி அலாரம் அமைத்து அதனை அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் நேரடியாக இணைக்க வேண்டும்.
ஏ.டி.எம். மற்றும் வங்கிகள் போலீஸ் நிலையத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ள வசதியாக நேரடி தொலைபேசி வசதி இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் வங்கி அலுவலர்கள் மற்றும் காவலாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.