ஏ.டி.எம். கார்டை மாற்றி விவசாயியிடம் ரூ.25 ஆயிரம் மோசடி; 2 வாலிபர்கள் கைது
ஏ.டி.எம். கார்டை மாற்றி விவசாயியிடம் ரூ.25 ஆயிரம் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 40), விவசாயி. இவர் செலவிற்கு பணம் எடுக்க குன்னம் அருகே உள்ள கொளக்காநத்தம் கிராமத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். ஆனால் அவருக்கு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க தெரியாததால் அங்கு நின்ற 2 வாலிபர்களை உதவிக்கு அழைத்துள்ளார். இதையடுத்து அவர்கள் தியாகராஜனின் ஏ.டி.எம். கார்டை வாங்கி ரூ.25 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அவரது கார்டுக்கு பதிலாக மாற்று ஏ.டி.எம். கார்டை கொடுத்து விட்டு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை என்று கூறி உள்ளனர்.
இந்தநிலையில் ஏ.டி.எம். கார்டு மாற்றப்பட்டதை அறிந்த தியாகராஜன் சத்தம் போட்டதால் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் குறித்து தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் அந்த 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் (29), நீலகிரி மாவட்டம் மேல கூடலூரை சேர்ந்த கபில் (26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.