ஏ.டி.எம். மைய கொள்ளையர்கள் 3 பேருக்கு போலீஸ் காவல்
திருவண்ணாமலையில் நடந்த ஏ.டி.எம். மைய கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை விசாரணைக்காக போலீஸ் காவலில் ஆந்திர போலீசார் அழைத்துச் சென்றனர்.
ஏ.டி.எம். கொள்ளை
திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் 4 ஏ.டி.எம். மையங்களில் மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். எந்திரங்களை உடைத்துவிட்டு சுமார் ரூ.70 லட்சத்துக்கு மேல் கொள்ளையடித்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வடமாநில கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதுவரை இந்த சம்பவத்தில் ஜாவீத், முகமது ஆரிப், ஆசாத் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்தநிலையில் ஆந்திர மாநிலத்திலும் இதுபோன்ற ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளதால் இந்த சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என ஆந்திர மாநில போலீசார் கருதுகின்றனர்.
போலீஸ் காவல்
எனவே அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்து அவர்களை போலீஸ் காவலில் எடுத்துள்ளனர். தொடர்ந்து வேலூர் ஜெயிலில் இருந்து ஜாவீத், முகமதுஆரிப், ஆசாத் உள்ளிட்ட 3 பேரையும் ஆந்திர மாநில போலீசார் காவலில் விசாரணைக்காக நேற்று அழைத்துச் சென்றனர். இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீசார் கூறுகையில், கைது செய்யப்பட்ட வடமாநில கொள்ளையர்களை ஆந்திர போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். விசாரணைக்கு பின்னர் திருப்பதி ஜெயிலில் 3 பேரையும் அடைத்துவிடுவார்கள் என்றனர்.